உலகின் நம்பர் ஒன் பில்லியனர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம், இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் 100 ஸ்டார்லிங்க் இணைய இணைப்பு அலகுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இந்த நன்கொடை நாட்டின் அனர்த்த நடவடிக்கைகளை வலுப்படுத்த ஒரு முக்கிய ஆதரவாக அமையும் என்று தெரிவித்துள்ளது.இந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவசர அனர்த்த சூழ்நிலைகளில் தொடர்பாடல் மற்றும் இணைப்பு வசதிகளை விரிவுபடுத்த முடியும் என்று நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இதன் மூலம் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் அவசர பதில் நடவடிக்கைகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர், தொடர்புடைய வன்பொருள் அலகுகள் ஏற்கனவே தீவை வந்தடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அனர்த்த பதில் நடவடிக்கைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அந்த உபகரணங்களை அனர்த்த முகாமைத்துவ மையத்திடம் விரைவாக ஒப்படைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் அனர்த்த நிலை ஏற்பட்டபோது, ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் ஏற்கனவே அதன் தற்போதைய இலங்கை வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத பில்லை ரத்து செய்திருந்தது, அதுவும் அனர்த்த நிலைக்கு உதவியாகவே செய்யப்பட்டது.
Tags:
Trending