ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற யூத சமூகத்தின் மத விழா ஒன்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தபடி, ஞாயிற்றுக்கிழமை மாலை "ஹனுக்கா" (Hanukkah) விழாவைக் கொண்டாடுவதற்காக
கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இதனை அந்நாட்டு அதிகாரிகள் தற்போது ஒரு பயங்கரவாதச் செயலாகக் குறிப்பிட்டுள்ளனர்.இந்தத் துப்பாக்கிச் சூட்டை இரு துப்பாக்கிதாரிகள் நடத்தியுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மற்ற சந்தேகநபர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் ஆரம்பித்தவுடன், தாங்கள் குழந்தைகளுடன் தப்பி ஓடிய விதத்தை நேரில் கண்டவர்கள் விவரித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒரு சிறு குழந்தையும், இரு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 29 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்களுக்குச் சொந்தமானது என நம்பப்படும் வாகனத்தில் இருந்து வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட பல குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குண்டு செயலிழக்கும் பிரிவினர் உடனடியாகச் செயற்பட்டு, அந்த சாதனங்களை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் யூத எதிர்ப்பு மனப்பான்மையின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறதுடன், உயிரிழந்தவர்களில் போண்டி சமூகத்தைச் சேர்ந்த ஒரு உதவி ரபியும் அடங்குவதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, இது நாட்டின் இதயத்தில் நடத்தப்பட்ட "தீய யூத எதிர்ப்பு பயங்கரவாதத் தாக்குதல்" என்று கூறியுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பிரதமர் கிறிஸ் மின்ஸ், ஆஸ்திரேலியாவில் இத்தகைய பொதுத் துப்பாக்கிச் சூடுகள் மிகவும் அரிதானவை என்பதால் இந்தச் சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் தெரிவித்தபடி, உடனடி அச்சுறுத்தல் நீங்கிவிட்டாலும், சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையும், தடயவியல் பரிசோதனைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
Tags:
Trending