19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பாகிஸ்தான் இளையோர் அணி இன்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
.
நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் இளையோர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 347 ஓட்டங்கள் என்ற பிரமாண்டமான மொத்த ஓட்ட எண்ணிக்கையை குவித்தது.
இதில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சமீர் மின்ஹாஸ் 172 ஓட்டங்களை பதிவு செய்தார், அஹ்மத் ஹுசைன் 56 ஓட்டங்களையும், உஸ்மான் கான் 35 ஓட்டங்களையும் பெற்று அவருக்கு சிறந்த ஆதரவை வழங்கினர். இந்திய பந்துவீச்சில், தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஹெனில் படேல் மற்றும் கிலான் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
348 ஓட்டங்கள் என்ற பிரமாண்டமான இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி, 27 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இந்திய இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷி 26 ஓட்டங்களை எடுத்து ஓரளவு வெற்றியைப் பெற்றாலும், அவர் ஆட்டமிழந்தவுடன் இந்திய இன்னிங்ஸ் வேகமாக சரிந்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மொஹம்மத் சையாம், அப்துல் சுபான் மற்றும் ஹுசைஃபா அஸான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த சிறப்பான வெற்றியுடன் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி இளையோர் ஆசிய சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. போட்டியின் நாயகன் மற்றும் தொடரின் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் சமீர் மின்ஹாஸ் வென்றார்.