2026 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தனது வதிவிட மற்றும் விசா முறையை புரட்சிகரமாக சீர்திருத்தியுள்ளது. திறமைகளை ஈர்ப்பது, முதலீட்டை மேம்படுத்துவது மற்றும் செயல்முறைகளை நெறிப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விசா பிரிவுகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் செயல்முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த காலக்கெடு மூலம் நாட்டிற்குள் நுழைவதையும் வசிப்பதையும் மேலும் எளிதாக்க எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய வாழ்க்கை, வேலை மற்றும் முதலீட்டு மையமாக எமிரேட்ஸ் நாட்டின் நிலையை வலுப்படுத்துவதே இந்த முக்கிய மாற்றங்களின் நோக்கமாகும்.அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சீர்திருத்தங்கள், சுற்றுலா விசாக்களுக்கான நான்கு புதிய நோக்கங்களைச் சேர்த்துள்ளன, மேலும் பல விசாக்களின் காலக்கெடு மற்றும் தகுதி அளவுகோல்களைத் திருத்தியுள்ளன. எமிரேட்ஸ் நாட்டின் பொருளாதார பல்வகைப்படுத்தலை மேலும் வளர்ப்பதற்கும், சிறப்புத் திறமைகளை ஈர்ப்பதற்கும், தொழிலாளர் சந்தையை பல்வகைப்படுத்துவதற்குமான அதன் உத்திக்கு இந்த மாற்றங்கள் இணங்குவதாக 24.ae செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய சுற்றுலா விசா பிரிவுகள்: இந்த புதுப்பிப்புகள் மூலம் நான்கு புதிய சுற்றுலா விசா பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
1) செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான விசா (Artificial Intelligence Specialists): செயற்கை நுண்ணறிவுத் துறையில் செயல்படும் உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனுசரணையின் கீழ் ஒற்றை அல்லது பல நுழைவுகளுக்குப் பெறலாம். பொழுதுபோக்கு விசாக்கள் (Entertainment Visas): கலாச்சார, கலை மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
2) நிகழ்வுகள் விசாக்கள் (Events Visas): ஒரு புரவலர் அமைப்பிலிருந்து அழைப்பைப் பெற்று, மாநாடுகள், கண்காட்சிகள், திருவிழாக்கள், விளையாட்டு, மத அல்லது கல்வி சார்ந்த கூட்டங்களை உள்ளடக்கியது.
3) கடல்சார் சுற்றுலா விசாக்கள் (Maritime Tourism Visas): அங்கீகரிக்கப்பட்ட பயணத்திட்டங்களுடன் கப்பல்கள் மற்றும் பொழுதுபோக்கு படகுகளுக்கான உரிமம் பெற்ற அனுசரணையாளர்களின் ஆதரவுடன் பல நுழைவு அனுமதிகளை வழங்குகிறது.
4) தற்போதுள்ள விசாக்களுக்கான திருத்தங்கள்: தற்போதுள்ள பல விசா விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு டிரக் ஓட்டுநர்கள் இப்போது கடுமையான நிபந்தனைகளின் கீழ் ஒற்றை அல்லது பல நுழைவு விசாக்களைப் பெறலாம். இதில் தொடர்புடைய விநியோக நிறுவனங்களின் அனுசரணை, செல்லுபடியாகும் உபகரணங்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்குதல் ஆகியவை அடங்கும்.
நண்பர்கள் அல்லது உறவினர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கான விதிகளின்படி, அனுசரணையாளர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது உறவின் அடிப்படையில் அமைகிறது: முதல் நிலை உறவினர்களுக்கு 4,000 திர்ஹாம்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை உறவினர்களுக்கு 8,000 திர்ஹாம்கள், மற்றும் ஒரு நண்பருக்கு அனுசரணை வழங்கும்போது 15,000 திர்ஹாம்கள் குறைந்தபட்ச வருமான வரம்பாக உள்ளது.
வணிக ஆய்வு விசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள் போதுமான நிதித் திறன், வெளிநாடுகளில் பெற்ற முந்தைய தொழில்முறை வெற்றி அல்லது தொடர்புடைய அதிகாரிகளால் அவர்களின் தொழிலுக்கு அங்கீகாரம் பெற்றிருப்பதைக் காட்ட வேண்டும்.
மனிதாபிமான சூழ்நிலைகளுக்கான வதிவிட விருப்பங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. போர், பேரழிவு அல்லது ஸ்திரமின்மை காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள தனிநபர்கள் ஒரு வருட விசா அனுமதி பெறலாம், இது அதிகாரப்பூர்வ தலைவரின் விருப்பப்படி புதுப்பிக்கப்படலாம் அல்லது நீட்டிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலைகளில், அனுசரணையாளர் இல்லாமலேயே இந்த விசாவைப் பெறலாம்.
எமிரேட்ஸ் நாட்டின் குடியிருப்பாளர்கள் அல்லது குடிமக்களை மணந்த வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் செல்லுபடியாகும் காரணங்களுக்காக நீட்டிக்கக்கூடிய ஆறு மாத வதிவிடத்தைப் பெறலாம், இது வீட்டுவசதி மற்றும் நிதித் தேவைகளுக்கு உட்பட்டது. பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனுசரணை வழங்கவும் இது வாய்ப்பளிக்கிறது.
செயல்முறைகளை தரப்படுத்துவதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், ஆறு முக்கிய பிரிவுகளின் மூலம் விசா காலக்கெடு மற்றும் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த கால அட்டவணை பின்பற்றப்பட்டுள்ளது.
கோல்டன் விசா சேவைகள்: இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சகம், ஃபெடரல் ஆணையத்துடன் இணைந்து, கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய சேவைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பும் வெளிநாட்டினருக்கான மின்னணு திரும்பும் ஆவணங்கள், 24 மணிநேர செயல்பாட்டு ஆதரவு, மனிதர்களை மீளக் கொண்டுவருதல், உடல்களை மீண்டும் கொண்டு வருதல் மற்றும் சிறப்பு உலகளாவிய உடனடி அழைப்பு சேவை ஆகியவையும் இதில் அடங்கும்.