'தித்வா' சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கையில் மூன்று நாட்களுக்குள் சுமார் 215 பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்ததில், பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் இந்த மண்சரிவு நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் லக்ஷிரி இந்திரதிலக்க தெரிவித்தார்.
உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை ஏற்படுத்திய பாரிய மண்சரிவுகள் மற்றும் வீதிகள், கிராமங்களை அண்மித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான பல்வேறு அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புவியியலாளர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வீடுகளின் பின் சுவர்கள் இடிந்து விழுதல், வீதிகளை அண்மித்த சுவர்கள் உடைந்து விழுதல் மற்றும் சரிவுகள் நிலையற்றதாக மாறுதல் போன்ற பல சம்பவங்கள் பதிவான அனர்த்தங்களில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அனர்த்த நிலைமை காரணமாக சில தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் முழுமையாக மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன. மேலும், அந்தப் பகுதிகளுக்குச் செல்லும் அணுகல் வீதிகளும் அழிந்துபோயுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களை மீண்டும் சீரமைக்க கணிசமான காலம் எடுக்கும் என்றும், பிரதேசத்திற்குப் பிரதேசம் ஏற்பட்டுள்ள சேதத்தின் தன்மையைப் பொறுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான கால அவகாசமும் மாறுபடலாம் என்றும் இந்திரதிலக்க வலியுறுத்தினார்.
செயற்கைக்கோள் புகைப்பட தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய அளவிலான மண்சரிவுகளை அடையாளம் காண்பதில் சில சிரமங்கள் இருப்பதால், பல்வேறு இடங்களில் கள ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 55 பேர் கொண்ட ஒரு விசேட குழுவை ஏற்கனவே நியமித்துள்ளது.
Tags:
News