களனி ராஜமகா விகாரையின் வருடாந்த துறுத்து மகா புண்ணிய உற்சவத்துடன் இணைந்து ஹெலேனா பெண்கள் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலம் காரணமாக இன்று களனி பொலிஸ் பிரிவில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த ஊர்வலம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஹெலேனா ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் இருந்து ஆரம்பமாகி, அங்கிருந்து கல்போரெல்ல மற்றும் வலன்கட சந்தியைக் கடந்து விகாரை வீதிக்குச் சென்று, பியகம வீதி வழியாக களனிசிறி வட்டாரத்தை அடைந்து களனி ராஜமகா விகாரையின் பிரதான வாசலால் விகாரை வளாகத்திற்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது.ஊர்வலம் வீதி உலா வரத் தொடங்கியவுடன், சம்பந்தப்பட்ட வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றும், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அமுல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தின்படி, டயர் சந்தியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் நுங்கன்கொட சந்தியிலிருந்து தோரண சந்திக்கு திருப்பி விடப்படும். அதேபோல், பியகம வீதியில் செல்லும் வாகனங்கள் ராஜமகா விகாரையின் பியகம வீதி வாசலிலிருந்து கங்காவெல்ல வீதி வழியாக களனிசிறி வட்டாரத்திற்கு அனுப்பப்படும், மேலும் பேலியகொடவிலிருந்து வரும் வாகனங்கள் களனிசிறி வட்டாரம் வழியாக கங்காவெல்ல வீதியில் பியகம வீதி வாசல் நோக்கி அனுப்பப்படும்.
ஊர்வலம் செல்லும் நேரத்தில், களனிசிறி வட்டாரத்திலிருந்து விகாரை வீதி வரையிலான வீதிப் பகுதி முழுமையாக மூடப்படும். ஊர்வலத்தின் முன் பகுதி விகாரை வீதி சந்தியை அடையும் வரை, முல்லேரியா - பியகம வீதியில் பியகம நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு வெளியேற மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஊர்வலத்தின் இறுதிப் பகுதி வலன்கட பகுதியிலிருந்து விகாரை வீதிக்குள் நுழைந்த பிறகு, நுங்கன்கொடவிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் வாகனங்களும், பியகமவிலிருந்து வராகொட வீதிக்குள் நுழையும் வாகனங்களும் பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, பேலியகொட பட்டி சந்தி மற்றும் கண்டி வீதியிலிருந்து வந்து வராகொட வீதிக்குள் நுழையும் வாகனங்கள் தோரண சந்தி வழியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பியகம வீதியில் வரும் வாகனங்கள் பேருந்து நிறுத்தம் அருகில் அல்லது விகாரை வீதி சந்தி வழியாக வராகொட நோக்கி அனுப்பப்படும், மேலும் ஊர்வலம் களனிசிறி வட்டாரத்தை நெருங்கியவுடன், பியகம வீதி வாசல் வழியாக வாகனங்கள் நுழைவது நிறுத்தப்பட்டு, வீதி வழமைக்கு கொண்டு வர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த போக்குவரத்து திட்டம் குறித்து கவனம் செலுத்தி சாரதிகளும் பொதுமக்களும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.