
கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அச்சுறுத்தும் அழைப்புகளை மேற்கொண்ட தொலைபேசி இலக்கம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சந்தேகநபரை கைது செய்ய முடிந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டம் படித்து வரும் மாணவராவார். இவர் கடந்த டிசம்பர் 03ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இளைஞர் நீண்டகாலமாக ஒரு நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Tags:
News