
'திட்வா' சூறாவளி மற்றும் அதனுடன் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்துறைப் பிரிவை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் ஒரு விசேட நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அவசர அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு தொழிலையும் மீண்டும் ஆரம்பித்து நடத்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்க கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சில் அல்லது அதன் கீழ் இயங்கும் ஒரு நிறுவனத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயமாகும்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB), கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB), தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகார சபை (NEDA), சிறு வணிக அபிவிருத்திப் பிரிவு (SED), தேசிய உற்பத்தித்திறன் செயலகம் (NPS) அத்துடன் தேசிய கைவினைப் பேரவை (NCC) மற்றும் தேசிய வடிவமைப்பு மையம் (NDC) ஆகிய நிறுவனங்களில் பதிவு செய்துள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு இந்த இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். www.industry.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் தொழில்முனைவோர் அபிவிருத்தி, சிறு வணிக அபிவிருத்தி, ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அதிகாரிகளின் ஊடாகவோ இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்த சரியான தரவுகளைப் பெற்று, அவற்றை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறையை முறைப்படுத்த அமைச்சு ஒரு தகவல் சேகரிப்பு முறையையும் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை வழங்கவும், விசாரணைகளுக்கும் 071-2666660 என்ற விசேட தொலைபேசி இலக்கம் திறக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தொழிலதிபர்களும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் தமது வணிகத் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் தகவல்களை உள்ளிடுவதற்கு அமைச்சு இணையத்தளம் அல்லது https://aid.floodsupport.org/business-impact என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம், அத்துடன் பிரதேச செயலக அதிகாரிகளின் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கான எதிர்கால ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Tags:
News