டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 50000 மற்றும் 25000 கொடுப்பனவுகளை விநியோகிப்பதை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு

president-orders-to-complete-distribution-of-50000-and-25000-allowances-before-december-31

வீடுகளை சுத்தம் செய்வதற்கான 25,000 ரூபா கொடுப்பனவையும், வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 50,000 ரூபா கொடுப்பனவையும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் மக்களுக்கு விரைவாக வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கடந்த 20ஆம் திகதி கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அனர்த்தத்திற்குப் பிந்தைய மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான மாவட்ட மட்டத்திலான திட்டங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது. பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய அமைச்சு செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள், நாடு முழுவதும் நடத்தப்படும் பாதுகாப்பான மையங்களின் முகாமைத்துவம், மக்களை மீளக்குடியமர்த்தும் செயல்முறை, வாழ்வாதார மீளமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இழப்பீடு வழங்கும் செயல்முறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த பணிகள் திறமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில், இழப்பீடு பெற தகுதியுடைய அனைவருக்கும் அந்தப் பலனை தாமதமின்றி வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களை மீளக்குடியமர்த்துவது மற்றும் அதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரதான மாவட்டங்களை இலக்காகக் கொண்ட புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கான தனித் திட்டங்களை வகுப்பதற்கும், அது தொடர்பான தரப்பினருடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை விரைவாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதன் அவசியம் குறித்தும், வீடமைப்பு சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்குவதில் நியாயத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தினார். பெரும் போகத்திற்காக விவசாயிகளைத் தயார்படுத்துவதற்காக நீர்ப்பாசன சீர்திருத்தங்கள், இழப்பீட்டு கொடுப்பனவுகள் மற்றும் விதை நெல் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.




சேதமடைந்த கால்நடைப் பண்ணை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல், அனர்த்தத்தால் அழிந்த சிறு வணிகங்களை மீண்டும் தொடங்க உதவுதல், மீன்பிடித் தொழிலை மீளமைத்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை விரைவாக முடிக்கும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அழிந்த கடவுச்சீட்டுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை விரைவாக மீண்டும் வழங்குவதற்கான திட்டம் குறித்தும் ஜனாதிபதி இங்கு கவனம் செலுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post