தித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவை மீட்டெடுக்க 3,100 கோடி ரூபாய் தேவைப்படும் என நேற்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல என வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட சேதம் அல்லது அனர்த்தத்திற்குப் பிந்தைய முகாமைத்துவத்திற்கான செலவு குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த மதிப்பீடும் செய்யப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பாக மேலும் விளக்கமளித்த வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து தற்போது அனர்த்த நிலைமை மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முறையான மதிப்பீட்டை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. எனவே, ஊடகங்களால் பரப்பப்பட்ட மேற்கண்ட நிதி புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது.
எவ்வாறாயினும், இந்த இக்கட்டான காலகட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அமைச்சு ஒரு விசேட நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவிகளை வழங்குவதற்கும், தொடர்பாடல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு விசேட அவசர ஒருங்கிணைப்புப் பிரிவு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கைக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து தொடர்ச்சியாக மனிதாபிமான உதவிகளும் ஆதரவும் கிடைத்து வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
News