இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட 316 வீதிகளில் 300 வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.
அனர்த்தத்தால் அதிக சேதம் பதிவான மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் சில வீதிகள் தற்காலிகமாகவே சீர்செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த வீதிகளை முழுமையாக அபிவிருத்தி செய்து வழமைக்குக் கொண்டுவர சுமார் 69 பில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக 40 பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றில் 36 பாலங்கள் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த பாலங்கள் எதிர்காலத்தில் முழுமையாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பதற்கு 100 பில்லியனுக்கும் அதிகமான ரூபா செலவாகும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்கு அவசர திருத்தங்களுக்காக 100 மில்லியன் ரூபாவும், பெய்லி பாலம் அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடுமையாக சேதமடைந்த வீதிகள், வடிகால்கள் மற்றும் பக்கச் சுவர்களை புனரமைப்பதற்கு சுமார் 14 பில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த அனைத்து பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Tags:
News