ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (4) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். அவருடன் வரும் பிரமாண்டமான பாதுகாப்பு வாகனத் தொடரில் உள்ள உலகின் கவனத்தை ஈர்த்துள்ள விசேட வாகனம் பலரின் பேசுபொருளாக மாறியுள்ளது.
உலகின் மிகவும் பலத்த பாதுகாப்பு கொண்ட தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் புடினின் பயணங்களுக்காகவே விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த 'Aurus Senat' வாகனம், நடமாடும் கோட்டை என்று அழைக்கப்படலாம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது உட்பட இராஜதந்திர நடவடிக்கைகளுக்காக புடின் இந்த அதி பாதுகாப்பான வாகனத்திலேயே கலந்துகொள்ளவுள்ளார்.இதற்கு முன்னர் ரஷ்ய அரச தலைவர்கள் Mercedes-Benz S 600 Guard Pullman போன்ற வெளிநாட்டு வாகனங்களை இராஜதந்திர நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய போதிலும், உள்நாட்டு உற்பத்தியான Aurus Senat வாகனத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அது "ரஷ்ய ரோல்ஸ் ராய்ஸ்" (Russian Rolls-Royce) என்று உலகளவில் பிரபலமடைந்தது. 'Kortezh' திட்டத்தின் கீழ் முழுமையாக ரஷ்யாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த லிமோசின் வாகனம், 2018 ஆம் ஆண்டு புடின் பதவியேற்றபோது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அண்மையில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இவ்வாறான ஒரு வாகனம் பரிசாக வழங்கப்பட்டதும் ஒரு விசேட நிகழ்வாகும்.
இந்த வாகனம் சாதாரண தாக்குதல்களுக்கு மட்டுமல்லாமல், கடுமையான போர்க்கால சூழ்நிலைகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் தனிச்சிறப்பாகும். இதில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் இரகசியமானவை.
ஸ்னைப்பர் குண்டுகள், கனரக ஆயுதங்கள் மற்றும் கவசங்களை ஊடுருவும் குண்டுகளையும் தாங்கும் சக்திவாய்ந்த கவசத்தால் இது ஆனது. ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை எதிர்கொள்ளும் திறனும் இதற்கு உண்டு. அவசர சூழ்நிலையில் தண்ணீரில் விழுந்தால், நீர்மூழ்கிக் கப்பல் போல நீரின் மேற்பரப்பில் மிதக்கும் திறனும், இரசாயன வாயுத் தாக்குதலின் போது வெளிப்புறக் காற்றை உள்ளே எடுக்காமல் செயல்படும் ஒரு சுயாதீன ஒட்சிசன் அமைப்பும், டயர்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் அதிவேகமாக ஓடக்கூடிய தொழில்நுட்பமும் இந்த வாகனத்தில் உள்ளது.
4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயங்கும் இந்த வாகனம், 6 முதல் 9 வினாடிகளுக்குள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியும். இதன் உட்புறம் மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண Aurus Senat வாகனம் 18 மில்லியன் ரூபிள் (சுமார் 2.5 கோடி இந்திய ரூபாய்) என்றாலும், புடின் பயன்படுத்தும் ஜனாதிபதிக்குரிய பிரத்தியேக வாகனம், அதன் இரகசிய பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக அதைவிட இருமடங்கு விலை அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் (SCO) போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் புடினுடன் இந்த வாகனத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, மோடி வரும் வரை புடின் சுமார் பத்து நிமிடங்கள் காத்திருந்ததாகவும், பின்னர் இரு தலைவர்களும் சுமார் 60 நிமிடங்கள் வாகனத்தில் பயணம் செய்தபோது இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
Tags:
World News