யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரைக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட விகாரைக்குச் சொந்தமான காணிகளை பொதுமக்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் உள்ளிட்ட குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்,
ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பலாலி பொலிஸார் 29 பேருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில் முன்கூட்டிய நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்த போதிலும், குழுவினர் அந்த உத்தரவுகளை மீறி செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவர்களில் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளும், வேலன் சுவாமி என்ற இந்து மதகுருவும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விகாரையின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறும், தனியார் காணிகளை விடுவிக்குமாறும் கோரி இந்த இடத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
News