
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 09 சிறப்புச் சித்திகளை (A) பெற்று உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த ஒரு திறமையான மாணவி, அதிக எண்ணிக்கையிலான மருந்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டதால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இந்த மாணவி கொழும்புக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நிலையில், கடந்த 07ஆம் திகதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று குறித்த மாணவி தனது தாயுடன் வீட்டில் இருந்தபோது, திடீரென அவருக்கு ஏதோ ஒரு நோய் நிலைமையும் ஒவ்வாமையும் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக தாய் தந்தைக்கு அறிவித்ததையடுத்து, வீட்டிற்கு வந்த தந்தை முச்சக்கர வண்டியில் அவரை சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையின் முதலுதவிப் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சடலம் தொடர்பில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், மாணவி சுமார் 65 மருந்து மாத்திரைகளை உட்கொண்டதும், அந்த அதிகப்பயன்பாடு உடலுக்குள் சென்றதே மரணத்திற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. கல்வி மற்றும் வெளிச் செயற்பாடுகளில் சமமாகத் திறமைகளை வெளிப்படுத்திய இந்த மாணவி இவ்வாறானதொரு முடிவை எடுக்கத் தூண்டிய உடனடி காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மீகொட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
News