
கெபிதிகொல்லாவ - ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், வீதியில் ஓட்டிச் செல்லப்பட்ட எருமை மாட்டுக்கூட்டத்தால் மோதப்பட்டு ஏற்பட்ட விபத்தை, ஒரு மதகின் சுவரில் மோதி ஏற்பட்டதாக சித்தரித்து குற்றத்தை மறைக்க முயன்ற மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் கெபிதிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய,ஹொரவ்பொத்தான ரஸ்னகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எம். மஞ்சுல நிஷாந்த ரத்நாயக்க என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். சம்பவம் நடந்த அன்று, சார்ஜன்ட் தனது கடமைகளை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர்களால் பிரதான வீதியில் பாதுகாப்பற்ற முறையில் ஓட்டிச் செல்லப்பட்ட எருமை மாட்டுக்கூட்டத்தால் மோதப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்து ஏற்பட்டவுடன் சார்ஜன்ட் மயக்கமடைந்து விழுந்துள்ளார். மனிதநேயத்தை மறந்து செயல்பட்ட மூன்று சந்தேக நபர்களும் உடனடியாக மயக்கமடைந்த அதிகாரியையும் அவரது மோட்டார் சைக்கிளையும் விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் பத்து மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மதகுக்கு அருகில் இழுத்துச் சென்று போட்டுள்ளனர். சார்ஜன்ட்டின் மோட்டார் சைக்கிள் மதகில் மோதி விபத்து ஏற்பட்டதாகக் காட்டி, உண்மையான சம்பவத்தையும் தங்கள் பொறுப்பையும் மறைக்கும் நோக்கத்திலேயே அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும், வீதியில் பயணித்த ஒரு பிரிவென ஆசிரியர் இந்தச் சம்பவத்தைப் பார்த்ததால், சந்தேக நபர்களின் திட்டம் தோல்வியடைந்ததுடன், அவர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி, எருமை மாடுகளால் மோதப்பட்டு மயக்கமடைந்த உடனேயே சார்ஜன்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். விபத்தை மறைக்க முயன்றமை மற்றும் மனிதக் கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹொரவ்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களும் கெபிதிகொல்லாவ பதில் நீதவான் திருமதி திலீஷியா திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இந்த மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Tags:
News