இன்று (21) காலை எல்பிட்டிய பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கரந்தெனிய 03 கனுவ பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் மிகவும் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய எட்டு கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ருக்ஷான் அவர்களுக்குக் கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் எட்டு கிலோகிராமிற்கும் அதிகம் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில், இந்த போதைப்பொருள் தொகை கடத்தல்காரர்களால் பகுதிகளாக விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க எல்பிட்டிய ஊழல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ஜயலத் மற்றும் காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, எல்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். ரந்தெனிய அவர்களின் நேரடி வழிகாட்டலில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கையில் எல்பிட்டிய பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க, ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ருக்ஷான் ஆகியோர் உட்பட பொலிஸ் சார்ஜென்ட்கள் கிரிஷாந்த (5462), ஜயலால் (58469), பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உதயகுமார (82030), ஜயசூரிய (106907), விதானச்சி (106103) மற்றும் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரி அஜித் (10864) ஆகிய அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர்.
(ஜயகாந்த லியனகே - பலபிட்டிய)