தீவு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் அதன் பிரதான விமானி உயிரிழந்துள்ளார். நேற்று (30) மாலை வென்னப்புவ, லூணுவில பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் உயிரிழந்தவர் விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய ஆவார்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கச் சென்ற பெல் 212 ரக ஹெலிகொப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க முயற்சித்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்க முயற்சித்தபோது, அந்த இடத்தில் மக்கள் கூடியிருப்பதைக் கண்ட விமானி, ஏற்படக்கூடிய பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக ஹெலிகொப்டரை அருகிலுள்ள நீரோடை (கிங் ஓயா) நோக்கித் திருப்பியதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில், விமானத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். அப்பகுதி மக்களும் காவல்துறையினரும் இணைந்து உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், படுகாயமடைந்த பிரதான விமானி உயிரிழந்துள்ளார். உதவி விமானி உட்பட ஏனைய நான்கு அதிகாரிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய 41 வயதான இரண்டு குழந்தைகளின் தந்தையாவார். அவர் 3,000 மணி நேரத்திற்கும் மேலான விமான அனுபவத்தைக் கொண்ட, விமானப்படையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான விமானி என்று விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைச் சபை நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பான வீடியோவை இங்கே கிளிக் செய்யவும்
Tags:
Trending
