சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு!

compensation-of-up-to-one-crore-rupees-for-cyclone-victims

 தீவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக தங்கள் வீடுகளையும், நிலங்களையும் இழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடும் போது இதனை வெளிப்படுத்தினார்.



பேரழிவு நிலைமையால் முழுமையாக சேதமடைந்து, மீண்டும் குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடு கட்டுவதற்காக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலம் இல்லாத சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும்.


அரசாங்கத்திடம் வழங்குவதற்கு நிலம் இல்லாத பட்சத்தில், வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக, நிலம் வாங்குவதற்காக மேலும் 50 இலட்சம் ரூபாய் வரை கொடுப்பனவு வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் குடியேற ஏற்றவாறு சுத்தம் செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட 10,000 ரூபாய் இழப்பீட்டிற்குப் பதிலாக, இம்முறை 25,000 ரூபாய் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டின் உரிமையைப் பொருட்படுத்தாமல், சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய சமையலறை உபகரணங்களை வாங்குவதற்காக ஒரு வீட்டிற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் 50,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.




வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறி வாடகை வீட்டில் வாழ விரும்பினால், அதற்காக மாதத்திற்கு 25,000 ரூபாய் வீதம் மூன்று மாத காலத்திற்கு கொடுப்பனவு வழங்கவும், தேவைப்பட்டால் அந்தக் காலத்தை ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த குடும்பங்களில் இரண்டு உறுப்பினர்கள் இருந்தால் மாதத்திற்கு 25,000 ரூபாயும், இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் மாதத்திற்கு 50,000 ரூபாயும் அடுத்த மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post