திட்வா புயலால் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

special-treatment-for-government-officials-who-missed-work-due-to-illness

நாட்டைப் பாதித்த அனர்த்த நிலைமைகள் காரணமாக பணிக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்று (16) வெளியிடப்பட்டது.




இதற்கமைய, திட்வா சூறாவளி காரணமாக தமது வசிப்பிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அதிகாரிகள், வீதிகள் தடைப்பட்டதால் அல்லது அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டதால் பணிக்கு சமூகமளிக்க முடியாத அதிகாரிகளுக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த விசேட விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக, தான் கடமைக்கு சமூகமளிக்க முடியாததற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட தமது பிரதேச கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையை உள்ளடக்கிய விண்ணப்பமொன்றை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.




பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்ட அதிகாரியின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் துல்லியம் குறித்து தனிப்பட்ட முறையில் திருப்தியடைய முடிந்தால் மட்டுமே, பணிக்கு சமூகமளிக்க முடியாத நாட்களுக்கான விசேட விடுமுறை அங்கீகாரத்திற்காக திணைக்களத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post