தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கு மத்தியில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் தகவல்களைச் சேகரித்துச் செயல்படும் ஒரு மோசடி கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வழங்குவதாகக் கூறி, இந்த மோசடிக்காரர்கள் குழந்தைகளின் தரவுகளைத் திருட முயற்சிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் (திட்டமிடல்/தகவல்) ஷானிகா மல்லல்கொட நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
குறிப்பாக, வட்ஸ்அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களைக் கேட்கும் எந்தவொரு வெளிநபருக்கோ அல்லது குழுவுக்கோ அத்தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு உதவி வழங்குவதாகக் கூறி வரும் நபர்களுக்கு குழந்தைகளின் தகவல்களை வழங்குவதன் மூலம், அந்தக் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும், அது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் அவர்களின் சுயமரியாதைக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒருவேளை குழந்தைகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டியிருந்தால், அது தங்கள் பிரதேசத்தின் கிராம சேவகர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அல்லது நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த அரச நிறுவனங்களைத் தவிர வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கும் குழந்தைகளின் விவரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் மோசடிக்காரர்களின் இலக்காக மாறும் ஆபத்து உள்ளது.
மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் பொறுப்பைப் பெற விரும்புவதாகக் கூறி பல்வேறு நபர்களும் நிறுவனங்களும் முன்வந்தாலும், சட்டவிரோதமான முறையில் எவருக்கும் ஒரு குழந்தையின் பொறுப்பை ஒப்படைக்க முடியாது என்று ஷானிகா மல்லல்கொட தெளிவுபடுத்தினார். ஒரு குழந்தையின் பொறுப்பை ஒப்படைப்பது நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவோ அல்லது நன்னடத்தை திணைக்களத்தின் தலையீட்டின் மூலமாகவோ மட்டுமே நடைபெற வேண்டிய ஒரு செயல்முறை என்பதால், வெளிநபர்களிடம் குழந்தைகளை ஒப்படைப்பதைத் தவிர்க்குமாறு அவர் பெரியவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாறான சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது குழுக்கள் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளின் தகவல்களைக் கேட்டால், உடனடியாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Tags:
Trending