ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள போண்டாய் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹனுக்கா (Hanukkah) விழாவை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகவும், உயிரிழந்தவர்களின் வயது வரம்பு 10 முதல் 87 வரை இருப்பதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என கருதி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த நேரத்தில் கடற்கரையில் 1000க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர், துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த கொடூரமான தாக்குதலை ஒரு தந்தையும் மகனும் நடத்தியுள்ளனர். 50 வயதான தந்தை பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், 24 வயதான மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேக நபரின் உடல்நிலை சீரானதும் அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, 24 வயதான சந்தேக நபர் பாகிஸ்தானியரான நவீத் அக்ரம் (Naveed Akram) என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் அவரது ஓட்டுநர் உரிமமும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தந்தையின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் சுமார் பத்து ஆண்டுகளாக துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர் என்றும், துப்பாக்கி கிளப் ஒன்றின் உறுப்பினராகவும் இருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடந்த இடத்தில் சந்தேக நபருக்கு சொந்தமான ஆறு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு அருகிலும், சந்தேக நபர்களின் வாகனத்திலும் பல செயலில் உள்ள கையெறி குண்டுகள் (IEDs) கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை அதிகாரிகளால் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் ஆணையாளர் மால் லான்யோன் (Mal Lanyon) குறிப்பிட்டார். இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது குறித்து எந்த முன் எச்சரிக்கையும் அல்லது தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆரம்பத்தில் மூன்றாவது சந்தேக நபர் குறித்து தேடப்பட்டாலும், தற்போது வேறு சந்தேக நபர்கள் தேடப்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சோகமான சம்பவத்தின் போது, 43 வயதான பழ வியாபாரி அஹ்மத் அல் அஹ்மத் (Ahmed Al Ahmad) காட்டிய வீரம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கேம்ப்பெல் பெலபவுர் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் வாகனத்தின் பின்னால் இருந்து வந்த அவர், துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்த சந்தேக நபர்களில் ஒருவரைத் தாக்கி, அவருடன் போராடி துப்பாக்கியைப் பறிக்க முடிந்தது. அந்த சண்டையின் போது அவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப், அஹ்மத்தின் இந்த செயல் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்று கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த சம்பவத்தை கண்டித்து, துப்பாக்கிதாரிகள் ஹனுக்கா விழாவின் முதல் நாளில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று கூறினார். சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பொலிஸ் ஆணையாளர், ஐசிஸ் (Isis) கொடி கண்டுபிடிக்கப்பட்டது போன்ற அறிக்கைகள் அல்லது ஊகங்கள் குறித்து உறுதியாக கருத்து தெரிவிக்க இது சரியான தருணம் அல்ல என்று கூறினார். இருப்பினும், இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள நோக்கங்களைக் கண்டறிவது விசாரணைகளின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
Tags:
Trending

