முன்னாள் அமைச்சரும், சமுர்த்தி மக்கள் சக்தி மொனராகலை மாவட்ட அமைப்பாளருமான விஜேத் விஜயமுனி சொய்சா, வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர்,
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட சமரசத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை திசையிலிருந்து கொழும்பு நோக்கி தெஹிவளை காலி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சரின் டிஃபென்டர் வாகனத்தில் ஒருவர் மோதியதில் அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது சாரதி வாகனத்தை பின்னோக்கி எடுக்க முயன்றபோது, பின்னால் வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த நபரை உடனடியாக தனது டிஃபென்டர் வாகனத்திலேயே களுபோவில வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னாள் அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். பன்னிப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த அந்த காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளித்த பின்னர், முன்னாள் அமைச்சர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் மது அருந்தவில்லை என மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.
காயமடைந்தவரின் தரப்புக்கும் முன்னாள் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, பொலிஸார் இந்த சம்பவத்தை சமரசம் செய்துள்ளனர். அதன்படி, கைது செய்யப்பட்டிருந்த அமைச்சரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.