வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியிலிருந்து நீக்குவதற்கான மாணவர் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இன்கிலாப் மஞ்சா அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹார்டியின் திடீர் மறைவைத் தொடர்ந்து, அந்நாட்டில் கடுமையான நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது.
டாக்கா நகரில் உள்ள ஒரு மசூதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த சிலரால் சுடப்பட்ட 32 வயதான இந்த இளம் செயற்பாட்டாளர், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருந்த ஹார்டியை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது, இது கடுமையான அரசியல் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.ஹார்டியின் மரணத்தைத் தொடர்ந்து, டாக்கா தலைநகர் உட்பட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. கோபமடைந்த மக்கள், 'தி டெய்லி ஸ்டார்' மற்றும் 'புரோதோம் அலோ' போன்ற நாட்டின் முன்னணி ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களுக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், கட்டிடங்களுக்கும் தீ வைத்தனர். இந்தத் தாக்குதலால் கட்டிடங்களுக்குள் சிக்கியிருந்த பத்திரிகையாளர்களை மீட்க பாதுகாப்புப் படைகளும், தீயணைப்புப் பிரிவினரும் பெரும் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சாயானோட் மற்றும் உடிச்சி ஷில்பி போன்ற கலாச்சார மையங்களையும் இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் செயல்கள் தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தக் கொலையை தேசத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்று இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முஹம்மது யூனுஸ் வர்ணித்தார். சனிக்கிழமையை தேசிய துக்க தினமாக அறிவித்த அவர், ஜனநாயகத்திற்கான பயணம் பயங்கரவாதத்தால் நிறுத்தப்பட முடியாது என்று வலியுறுத்தினார். இருப்பினும், நிலவும் வன்முறைச் சூழ்நிலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும், பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டில் தாமதம் இருப்பதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சில அரசியல் ஆய்வாளர்கள், தற்போதைய குழப்பமான சூழ்நிலை காரணமாக இடைக்கால அரசாங்கம் பிப்ரவரி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை டாக்கா நகரின் மாணிக் மியா அவென்யூவில் நடைபெற்ற ஹார்டியின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் மத சடங்குகள் நடத்தப்பட்ட பின்னர், தேசிய கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறை அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய மாணவர் தலைவர்கள், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரினர். ஹார்டியின் மரணத்திற்கு நீதி கேட்டும், ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீவிரவாதக் குழுக்கள் இந்திய எல்லை நோக்கி போராட்டப் பேரணிகளை நடத்தியதால், இந்திய பாதுகாப்புப் படைகள் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், கொலையின் முக்கிய சந்தேக நபரான ஃபைசல் கரீம் தற்போது இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தைச் செய்வதற்கு முந்தைய நாள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடக்கும் என்று தனது காதலிக்கு அவர் சூசகமாகத் தெரிவித்திருந்ததாக பாதுகாப்புப் படைகள் கண்டறிந்துள்ளன. மேலும், மைமன்சிங் நகரில் 25 வயது இந்து இளைஞர் ஒருவர் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கொடூரமாகக் கொல்லப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஷேக் ஹசீனாவை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய ஹார்டி, இதற்கு முன்னர் இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய 'மகா வங்கதேசம்' என்ற வரைபடத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டதன் மூலம் சர்ச்சைக்குள்ளான ஒரு நபராகும்.
Tags:
World News