திட்வா சூறாவளியின் தாக்கத்தால் பலத்த சேதமடைந்த ரண்டம்பே - மஹியங்கனை மின் பரிமாற்றப் பாதையின் புனரமைப்புப் பணிகள் துரிதமாக நிறைவு செய்யப்பட்டு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) அன்று மின் விநியோகம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக, ரண்டம்பே முதல் மஹியங்கனை வரை செல்லும் 132 கிலோ வோல்ட் உயர் மின்னழுத்த பரிமாற்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு கோபுரம் முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்ததுடன், அதன் மின் கம்பிகள் அமைப்புக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.
இந்த திடீர் செயலிழப்பு காரணமாக, மஹியங்கனைப் பிரதேசம் உட்பட கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர் மின் விநியோகத் தடங்கல் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
எவ்வாறாயினும், இந்த நிலைமையை சமாளிப்பதற்காக இலங்கை மின்சார சபை உடனடியாக தலையிட்டு, 33 கிலோ வோல்ட் தற்காலிக மின் கம்பிகள் அமைப்பைப் பயன்படுத்தி வைத்தியசாலைகள் மற்றும் நீர் இறைக்கும் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், தற்போதுள்ள கொள்ளளவு பிரச்சினைகள் காரணமாக, சில பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையில் சில மணிநேரங்களுக்கு மின்சாரம் வழங்கும் விசேட திட்டமொன்றையும் செயற்படுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையில், மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சர் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டதுடன், கோபுரம் இடிந்து விழுந்ததால் சேதமடைந்த போவத்தென்ன நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.
Tags:
News