வெள்ளத்தால் சேதமடைந்த பணத்தாள்கள்: மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

central-bank-informs-about-what-can-be-done-with-flood-damaged-banknotes

 தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் ஈரமாகிய அல்லது சேதமடைந்த பணத்தாள்களைப் பயன்படுத்தும் முறை குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்த பணத்தாள்கள் மேலும் சேதமடைவதைத் தவிர்த்து, அவற்றை முறையாகப் பயன்படுத்துவதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.



நீர் உறிஞ்சப்பட்டதால் ஈரமாகிய பணத்தாள்களை மிகவும் கவனமாகவும் மென்மையாகவும் கையாள வேண்டும். பணத்தாள்கள் கட்டுகளாக இருந்தால், அவற்றை ஒரே நேரத்தில் பலவந்தமாக வெளியே இழுப்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு ஈரமாகிய பணத்தாள்க் கட்டுகளைப் பிரித்து, ஈரப்பதத்தை உறிஞ்சும் உறிஞ்சுபொருளால் சுற்றி, அறை வெப்பநிலையில் மெதுவாக உலர விட வேண்டும்.


ஒருவேளை பணத்தாள்களை ஒன்றிலிருந்து ஒன்று பிரிப்பது கடினமாக இருந்தால், அந்த பணக்கட்டை குளிர்ந்த அல்லது மிதமான சூடுள்ள சுத்தமான நீரில் மூழ்கடித்து, தாள்கள் தளர்வடையும் வரை ஒரு முனையில் பிடித்து பணக்கட்டை மெதுவாக அசைப்பதன் மூலம் தாள்களைப் பிரிக்க முயற்சி செய்யலாம்.

இங்கு சூடான நீர், சலவைத் தூள் அல்லது வேறு எந்த இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்துவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய வங்கி வலியுறுத்துகிறது. பணத்தாள்களை உலர்த்தும்போது, ஒவ்வொரு தாளையும் சுத்தமான மற்றும் உலர்ந்த மேற்பரப்பில் பரப்பி வைக்க வேண்டும். அந்த மேற்பரப்பு வண்ணமயமாகவோ அல்லது அச்சிடப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. மென்மையான துணிகள், காகிதம் அல்லது துண்டுகள் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்தலாம். நன்கு காற்றோட்டமான இடத்தில் இயற்கையாக காற்றில் உலர விடுவது மிகவும் பொருத்தமானது.


பணத்தாள்களை விரைவாக உலர்த்துவதற்கு இஸ்திரிப் பெட்டிகள், அடுப்புகள் அல்லது வேறு எந்த அதிக வெப்ப மூலங்களையும் பயன்படுத்தக்கூடாது.

குறிப்பிட்டபடி முழுமையாக உலர்த்தப்பட்ட பின்னரும், அந்த பணத்தாள்கள் பரிவர்த்தனைகளுக்கு மேலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால், அவற்றை மாற்றுவதற்காக எந்தவொரு வணிக வங்கிக்கும் சமர்ப்பிக்க மக்களுக்கு வாய்ப்பு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post