
அனர்த்த நிலைமையின் மத்தியில் முழு நாடும் ஒற்றுமையாகச் செயற்படும் ஒரு முக்கியமான தருணத்தில், மக்களைத் தவறாக வழிநடத்தும் பொய்யான தகவல்களையும் செய்திகளையும் உருவாக்கி சமூகமயமாக்கும் நபர்களுக்கு எதிராக, அவர்களின் தராதரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையிலான செய்திகளைப் பரப்புவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுவரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணினிப் புலனாய்வுப் பிரிவின் ஊடாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முப்படை பாதுகாப்புத் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அனர்த்தத்திற்குப் பிந்தைய காலத்தில் மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் பின்னணியில், சில தரப்பினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி எந்தவித அடிப்படையுமற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூகமயமாக்கும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்றும், இவ்வாறான ஒரு அனர்த்தமான சூழ்நிலையில் நாடு முழுவதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் ஒழுக்கமற்ற செயற்பாடுகளிலிருந்து விலகி இருக்குமாறு பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் அவர் பொதுமக்களிடம் மரியாதையுடன் கேட்டுக்கொண்டார்.
Tags:
Police