துபாயில் இருந்து வந்து மலேசியாவுக்குச் செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்த தான்சானியப் பிரஜையான விமானப் பயணிப் பெண் ஒருவர் இன்று (05) காலை விமான நிலைய வளாகத்தில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
29 வயதான இந்தப் பெண், ஃபிட்ஸ் ஏர் விமான சேவைக்குச் சொந்தமான 8D – 822 என்ற விமானத்தில் இன்று காலை 06.30 மணியளவில் துபாயில் இருந்து கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குப் புறப்படும் நோக்குடன் அவர் இடைத்தங்கல் முனையத்தில் தங்கியிருந்துள்ளார்.
அங்கு தங்கியிருந்தபோது அவருக்கு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டதால், உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் அவரை விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
அந்த மையத்தின் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் தலையீடு மற்றும் உதவியுடன் அவர் பாதுகாப்பாக ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், தாயும் புதிதாகப் பிறந்த குழந்தையும் மேலதிக சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:
News