
கொழும்பு பேராயர் அதி வணக்கத்துக்குரிய மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கையில், பெற்றோரின் உரிமைகளைப் பறிக்கும் கல்விச் சீர்திருத்த முறையை தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஹங்வெல்ல, பத்தகம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பேராயர், இன்றைய சமூகத்தில் திருமண வாழ்க்கையை சீர்குலைக்கும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புதிய பாலியல் கல்வி பாடத்திட்டம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் கூறினார். ஆறு வயது குழந்தைகள் முதல் வயது வந்தோர் வரை பாலியல் கல்வி மூலம் பல்வேறு "வித்தியாசமான" விடயங்களை கற்பிக்கும், அவை செய்யக்கூடியவை என்றும், அவை நல்லவை என்றும், தவறில்லை என்றும் கற்பிக்கும் இந்த முறை பெற்றோரின் உரிமைகளைப் பறிப்பதாகும் என்று அவர் கடுமையாகக் கூறினார். "எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று அவர் வலியுறுத்தினார்.
இலங்கைக்கு பரம்பரை ரீதியாகவே தனித்துவமான கலாசாரம், நாகரிகம் மற்றும் விழுமியக் கட்டமைப்பு உள்ளது என்றும், பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய பிரதான மதங்களின் கொள்கைகளால் போஷிக்கப்பட்ட மனிதாபிமான கலாசாரக் கொள்கைகளின் தொகுப்பு எங்களிடம் உள்ளது என்றும் கர்தினால் ஆண்டகை சுட்டிக்காட்டினார். திருமண வாழ்க்கை, குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பாலியல் குறித்து சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மாதிரிகள் மற்றும் சட்டக் கட்டமைப்பு நாட்டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த மரபுகளைப் புறக்கணித்து, மேற்கத்திய உலகில் நிகழும் பல்வேறு "வித்தியாசமான" விடயங்களை பணம் கிடைப்பதால் ஏற்றுக்கொண்டு, தமது கொள்கைகளை காட்டிக்கொடுக்குமானால், அத்தகைய அரசாங்கத்திற்கு நாட்டை ஆள எந்த உரிமையும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார். நாட்டின் கலாசார மரபுக்கு தீங்கு விளைவிக்க முயற்சித்தால், அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றும், அரசியல் தலைவர்கள் தங்களுக்குரிய பங்கை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், தங்களுக்குச் சொந்தமில்லாதவற்றைச் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐக்கிய நாடுகளின் குடும்பக் கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் பணத்துடன் வரும் தவறான கருத்துக்களும் மனப்பான்மைகளும் நாட்டின் கலாசார மற்றும் மதப் பின்னணியை அழித்து, குடும்பங்களைச் சீர்குலைக்கின்றன என்றும் அவர் கூறினார். குழந்தைகளை பெற்றோர்களுக்கு எதிராகத் திருப்பி, அவர்களுக்கு கீழ்ப்படியாமல் தங்களுக்கு விருப்பமானதைச் செய்ய அனுமதிப்பதால் பெரும் சேதம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குழந்தைகளுக்கு மனித உரிமைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் எழுந்து நிற்பது மனித உரிமையாக வரையறுக்க முடியாது என்று கர்தினால் ஆண்டகை வலியுறுத்தினார். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் அன்பு அடிப்படையிலான உறவு இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.