கடந்த நாட்களில் நிலவிய கடும் மழை காரணமாக கொத்மலை நீர்த்தேக்கம் தொடர்பில் நாட்டில் எழுந்த பல்வேறு கருத்துகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தார்.
கொத்மலை நீர்த்தேக்கம் தொடர்பில் கடந்த நாட்களில் நிலவிய கருத்துகள் குறித்து அதிகாரிகள் இங்கு தெரிவிக்கையில், கடந்த 27ஆம் திகதி கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு வரலாற்றில் அதிகளவான நீர்வரத்து கிடைத்ததாகவும், இதனால் கொத்மலை அணையைப் பாதுகாக்கும் நோக்கில் பாரம்பரிய முறைப்படி விஞ்ஞானபூர்வமாக வான்கதவுகள் திறக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டம் நேற்று (08) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றதுடன், நுவரெலியா மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியதற்கான காரணத்தை
ஜனாதிபதி இங்கு ஆராய்ந்தார்.
கிரிகரி ஏரி தொடர்பான மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப சேவைகளை நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்படைத்து, பொருளாதார நடவடிக்கைகளுக்காக நகர சபையுடன் ஒப்பந்தம் செய்யுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இங்கு அறிவுறுத்தினார்.
அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், கால்வாய்கள் குறுகியமை மற்றும் கிரிகரி ஏரியின் மதகு பெரிதாக்கப்படாமை ஆகியவையே இந்த நிலைமைகளுக்குக் காரணம் என்பதையும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலின் போது நுவரெலியா மாவட்டத்தின் நீர்ப்பாசன அமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.
நுவரெலியா மாவட்டத்தில் 4,700 ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 500 ஏக்கர் தவிர மற்ற வயல்களில் பெரும் போகத்தில் பயிர் செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.
Tags:
News