இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்படுவதற்கான உத்தியோகபூர்வ கையொப்பமிடல் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டில் முதன்முதலில் கையெழுத்திடப்பட்டு, 2016 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அதன் செல்லுபடியாகும் காலம் 2021 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அதன் பின்னர், இரு நாடுகளின் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையில் நீண்டகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, இந்த ஒப்பந்தம் மீண்டும் கைச்சாத்திடப்பட்டது.
புதிய உடன்படிக்கையின்படி, சம்பந்தப்பட்ட நாட்டில் ஆறு வருடங்களுக்கும் குறைவான காலம் வசிக்கும் குடிமக்கள், மேலதிக கோட்பாட்டு அல்லது நடைமுறைப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்காமல், தமது தேசிய சாரதி அனுமதிப்பத்திரத்தை, வசிக்கும் நாட்டின் அனுமதிப்பத்திரமாக மாற்றிக்கொள்ளும் விசேட சந்தர்ப்பத்தைப் பெறுவர்.
இத்தாலியில் வாழும் மற்றும் பணிபுரியும் ஏராளமான இலங்கைப் பிரஜைகளுக்கு இந்த வசதி பெரும் உதவியாக அமையும். இதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், அந்நாட்டில் மிகவும் பயனுள்ள முறையில் சேவை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.
இரு நாட்டு அரசாங்கங்களாலும் இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், 60 நாட்களுக்குள் இது அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததும் அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
Tags:
News