அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தக்ஷி என்ற பெண் சந்தேகநபருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் பொறுப்பில் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நந்தகுமார் தக்ஷி என்ற சந்தேகநபருடன் குறித்த பொலிஸ் அதிகாரி முறையற்ற விதத்தில் செயற்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பாக, இந்த சார்ஜன்ட் குறித்த சந்தேகநபருடன் ஒரே பிஸ்கட்டை இரண்டாகப் பிரித்து சாப்பிட்டதாகவும், சைகை மொழி மூலம் இரகசியமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடமைப் பொறுப்புகளை மீறி கைதிகளுடன் இவ்வாறு செயற்பட்டதன் காரணமாக, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு இவரை பணி இடைநீக்கம் செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தக் குற்றத்தின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது உருவ ஒற்றுமையைக் கொண்ட இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நந்தகுமார் தக்ஷி ஆகிய இருவரும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர். கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் தயாரித்த போலி துருக்கி கடவுச்சீட்டில் முத்திரைத் தவறு காரணமாக நேபாள குடிவரவு அதிகாரிகள் அதனைக் கைப்பற்றியிருந்தனர்,
அதன்பிறகு, அவர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக வேறு ஒரு முறையை ஏற்பாடு செய்ய குற்றக் கும்பல் முயன்றது.
அப்போது, ஜே.கே. பாய் என்பவரால் இஷாரா செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தக்ஷி என்ற இந்தப் பெண், அவரது விவரங்களைப் பயன்படுத்தி இஷாரா துருக்கிக்கும் மலேசியாவுக்கும் தப்பிச் செல்வதற்காக புதிய போலி கடவுச்சீட்டைத் தயாரிக்கும் நோக்குடன் இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார். இவர்கள் நேபாளத்தில் தங்கியிருந்த காலத்தில் இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாய் ஆகியோர் சுமார் ஒரு மாத காலம் ஒரே அறையில் தங்கியிருந்ததும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல உள்ளிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட மற்றும் இரகசிய விசாரணையை அடுத்து, சந்தேகநபர்கள் நேபாளத்தின் காத்மண்டு நகரில் மறைந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டனர். அதன்படி, கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி அந்நாட்டு பொலிஸாரின் உதவியுடன் இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய், யாழ்ப்பாண சுரேஷ், தக்ஷி, கம்பஹா பாபா மற்றும் நுகேகொட பாபி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
Tags:
Trending