ஸ்ரீபாத யாத்திரை: ஹட்டன் வழியாக வரும் பக்தர்களுக்கு இடிகட்டுப்பானைக்கு மேல் செல்ல தடை!

entry-restrictions-for-sripada-devotees-via-hatton-until-landslide-situation-averted

எதிர்வரும் 2025-2026 ஸ்ரீபாத யாத்திரை காலத்தில், ஹட்டன் பாதை வழியாக வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களுக்கு இடிகட்டுப்பானை பகுதிக்கு மேல் செல்ல சிறப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் அறிவித்துள்ளார். தற்போது நிலவும் மோசமான வானிலை மற்றும் நிலத்தின் பாதுகாப்பு குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைக்குப் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



இந்த புதிய தீர்மானத்தின்படி, ஹட்டன் பாதை வழியாக வரும் யாத்திரிகர்கள் வழக்கம் போல் இடிகட்டுப்பானை வரை பயணிக்கலாம். அங்கிருந்து இடிகட்டுப்பானை பொலிஸ் சோதனைச் சாவடியைக் கடந்து சுமார் 600 மீட்டர் தூரம் பயணித்த பின்னர் இரத்தினபுரி பாதைக்குச் செல்ல வேண்டியிருக்கும். ஹட்டன் பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு இரத்தினபுரி பாதை வழியாக இணைவதன் மூலமே ஸ்ரீபாத உச்சிப்பகுதிக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




அண்மையில் ஸ்ரீபாத ஹட்டன் பாதையில் உள்ள மஹாகிரிதும்ப பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அப்பகுதியில் பல அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீபாதஸ்தானாதிபதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன நாயக்க தேரர்,


எத்தனை யாத்திரிகர்கள் வந்தாலும், அவர்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் 2025-2026 ஸ்ரீபாத யாத்திரை காலம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post