கடந்த நாட்களில் கந்தப்பொல பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் மழையுடன், கந்தப்பொல சந்திரிகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தேடி இலங்கை இராணுவம் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. நுவரெலியா சிங்கப் படையணியின் வீரர்கள் தலையிட்டு நேற்று (01) முதல் இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயர சம்பவத்தில் ஒரு தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் பாட்டி ஆகியோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 27ஆம் திகதி பகல் பொழுதில் பிரதேசத்தில் பெய்த பலத்த மழையுடன் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், வீடு மண்சரிவுக்குள்ளான அந்த ஆபத்தான தருணத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குள் இருந்ததாக பிரதேசவாசிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், ராகலை மற்றும் கந்தப்பொல பிரதேசங்களில் பெய்த கடும் மழையினால் ராகலை ஹெனேகல பிரதேசத்தில் இரண்டு குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மேலும் ஒரு அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tags:
News