வெள்ளப் பெருக்கு காரணமாகப் பலத்த சேதமடைந்த மலையக ரயில் பாதையைச் சீரமைக்க இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகலாம் எனப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
வெள்ளப் பெருக்கு காரணமாகப் பேராதனை ரயில் பாலத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பாலத்தைச் சீரமைப்பது தற்போது அதிகாரிகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாலத்தைச் சீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக ரயில்வே பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர்கள் குழுவொன்று பேராதனைப் பிரதேசத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பாலத்தினுள் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையின் உதவியுடன் அகற்றும் நடவடிக்கைகள் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மலையகப் பாதையின் மேல் ரயில் நிலையங்களை அண்மித்து சுமார் எட்டு ரயில்கள் சிக்கியுள்ளதால்,
அவற்றை மீண்டும் கீழே கொண்டு வர பாதையை விரைவாகச் சீரமைப்பது அத்தியாவசியமாகியுள்ளது.
இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, ரம்புக்கனை முதல் கண்டி வரையிலான ரயில் பாதையின் பகுதியை விரைவாகச் சீரமைப்பதே தனது அமைச்சின் முக்கிய நோக்கம் என்றும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதால், வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்கும் பணிகளுக்கு ஊழியர்களை ஈடுபடுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
News