
அளுத்கம பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு ஆடம்பர வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு தங்கியிருந்து இணையம் ஊடாக பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்ட பதினாறு சீனப் பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (09) முற்பகல் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்
இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இந்த இடத்தில் முகாமிட்டு இந்த மோசடியை இரகசியமாக நடத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.இந்தக் குழுவினர் இணையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அத்துமீறி நுழைந்து பண மோசடி செய்தல் மற்றும் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பெறுதல் போன்ற பல இணையக் குற்றங்களைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இருபது Apple வகை கையடக்கத் தொலைபேசிகள், ஐம்பது சிம் அட்டைகள் மற்றும் மடிக்கணினிகள் உட்பட மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட பல மின்னணு உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேதவத்தவின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அளுத்கம பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த வலையமைப்பு குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சீனப் பிரஜைகள் குழுவினர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
Tags:
News