அனுராதபுரம் மேலதிக நீதவான் திருமதி தசுனி ஹபுஆரச்சி, சர்வஜன பலவேகய கட்சியின் நகர சபை உறுப்பினர் ஒருவரையும் மற்றுமொரு சந்தேக நபரையும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அனுராதபுரம் மாநகர சபையின் கீழ் இயங்கும் ஒப்பந்த வேலைத்தளத்தில் ஊழியர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதவான் நேற்று முன்தினம் (24) இந்த உத்தரவை பிறப்பித்தார்.அனுராதபுரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் மதுபோதையில் இடம்பெற்றதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்ட மேலதிக நீதவான் இந்த முடிவை எடுத்தார். அனுராதபுரம் மாநகர சபையின் சர்வஜன பலவேகய கட்சியின் ஒரேயொரு உறுப்பினரான திலக் நிஷாந்த கினிகே மற்றும் ஜீவன் பண்டார சமரகோன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் வழக்கு நடவடிக்கைகள் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கருணானந்த வன்னினாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் நந்தசேன மற்றும் சார்ஜன்ட் இளங்கசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தனர். சந்தேகநபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சந்தன வீரக்கோன் ஆஜரானார், பாதிக்கப்பட்ட தரப்பின் உரிமைகளுக்காக சட்டத்தரணிகளான சஞ்சய ரத்நாயக்க மற்றும் பிரதீப் திசாநாயக்க ஆகியோர் ஆஜராகினர்.