நீதிமன்ற உத்தரவுகளில் மோசமான வானிலையை கருத்தில் கொள்ள பிரதம நீதியரசர் பணிப்புரை

chief-justice-advises-to-consider-adverse-weather-conditions-in-court-orders

 தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாத தரப்பினருக்கு பாதிப்பு அல்லது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் உத்தரவுகளைப் பிறப்பிப்பதைத் முடிந்தவரை தவிர்க்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரிதி பத்மன் சூரசேனவின் அறிவுறுத்தலின் பேரில், நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் கடந்த 30ஆம் திகதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளுக்கும், அத்துடன் சட்டமா அதிபருக்கும் இது குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால அனர்த்த நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல வீடுகளும் சொத்துக்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், சில பகுதிகளில் உயிர்ச்சேதங்கள் கூட பதிவாகியுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது. மேலும், சில நீதிமன்றக் கட்டிடங்களும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், வழக்கறிஞர்கள், பொலிஸ் அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளைப் பெறுவதில் கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளதால், டிசம்பர் 01 ஆம் திகதி முதல் ஆரம்பமான இந்த வாரத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நீதிமன்றத்திற்கு வர முடியாத தரப்பினருக்கு பாதகமான உத்தரவுகளைப் பிறப்பிப்பதைத் தவிர்த்து, நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படுமாறு அனைத்து நீதிபதிகளுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நிலவும் கள நிலவரத்தை உரிய முறையில் மதிப்பீடு செய்த பின்னர், வழமையான நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் மேலதிகமாக அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post