
மன்னார் மாவட்டத்தில் மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை விற்பனைக்காக சேமித்து வைப்பதும், இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதும் நேற்று (03) முதல் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலஸ்ஸ, தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த நாட்களில் நிலவிய மோசமான வானிலை மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாடுகள் உட்பட பண்ணை விலங்குகள் பெருமளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனர்த்தத்தால் உயிரிழந்த அந்த விலங்குகளின் இறைச்சி மனித நுகர்வுக்காக சந்தைக்கு வரும் அபாயம் உள்ளதால்,
அதைத் தடுப்பதற்கான ஒரு ஆரம்ப நடவடிக்கையாக இந்தத் தடையை விதிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, வெள்ள அனர்த்தங்களால் உயிரிழந்த விலங்குகளின் சடலங்கள் மனித நுகர்வுக்காக விற்பனை செய்யப்படுகின்றனவா அல்லது கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை கண்டறிய நாடு முழுவதும் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.
இவ்வாறான சட்டவிரோத மற்றும் சுகாதாரமற்ற இறைச்சி வியாபாரம் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனடியாக தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்ய முடியாத சந்தர்ப்பங்களில், 24 மணி நேரமும் இயங்கும் சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் 1926 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்கலாம்.
Tags:
News