சத்தம் குறைக்குமாறு கூறிய பொலிஸாருக்கு மஹரகமவில் தாயும் மகனும் தாக்குதல்!

policeman_1

 சத்த ஒலிபெருக்கியின் சத்தத்தைக் குறைக்குமாறு அறிவுறுத்திய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரைத் தாக்கிய பெண்ணும் அவரது மகனும் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மஹரகம பிரதேசத்தில் உள்ள புத்தகக் கடைக்கு அருகில் ஒரு பெண் ஒலிபெருக்கி மூலம் அதிக சத்தத்துடன் பாடல்களைப் பாடி பணம் சேகரிப்பதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. அந்த முறைப்பாட்டை விசாரிப்பதற்காக சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரி, சத்தத்தைக் குறைக்குமாறு அந்தப் பெண்ணுக்கு அறிவுறுத்தியதாகவும், அப்போது அவர் அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது சீருடையைப் பிடித்து இழுத்து இடையூறு விளைவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




அதன் பின்னர், பொலிஸ் அதிகாரி பாதசாரி கடவையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது மகன் எனக் கூறப்படும் நபரும் இணைந்து அதிகாரியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் (56124) சாந்தா என்ற பொலிஸ் சார்ஜன்ட் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் 58 வயதுடைய கொட்டாவ, ரூக்மலே வீதியைச் சேர்ந்தவர் என்பதுடன், 27 வயதுடைய சந்தேகநபரான ஆண் ஹோமாகம, பிட்டிப்பன தெற்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இச்சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post