தீவு முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட தலையீட்டை மேற்கொண்டுள்ளார். அதன்படி, ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர், அனர்த்த நிவாரணத்திற்காக தேவையான உதவிகளை வழங்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா அவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் சேதமடைந்துள்ள நாட்டின் வீதி அமைப்பை புனரமைப்பதற்கும், ரயில்வே அமைப்பை விரைவாக பழுதுபார்ப்பதற்கும் ஜப்பானிய அரசாங்கத்திடம் உள்ள விசேட தொழில்நுட்ப அறிவு, உழைப்பு மற்றும் பங்களிப்பை வழங்குமாறு சஜித் பிரேமதாச இங்கு ஜப்பானிய தூதுவரிடம் கோரினார்.
அதேபோல், கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவரையும் எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்து, தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து விரிவாகக் கலந்துரையாடினார். இந்த அனர்த்த நிலையிலிருந்து மீண்டு ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்பதற்கு கொரிய அரசாங்கத்தின் அதிகபட்ச உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அவர் அங்கு கொரியத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையில், இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ அம்மையாரைச் சந்தித்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தினார். அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட சுகாதார சேவைகளை மீட்டெடுப்பதற்கும், வெள்ளம் வடிந்த பிறகு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை எதிர்கொள்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு சஜித் பிரேமதாச அங்கு கேட்டுக்கொண்டார்.
Tags:
Political