CPC-க்கு 800 மில்லியன் நஷ்டம்: தம்மிக்க ரணதுங்க பிணையில் விடுதலை - அர்ஜுன இலங்கை வந்ததும் கைது

cpc-800-million-loss-dhammika-ranatunga-released-on-bail-arjuna-arrested-upon-arrival-in-sri-lanka

 லங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அதன் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (15) உத்தரவிட்டார்.



2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் எரிபொருள் கொள்வனவுக்காக நடைமுறைப்படுத்தப்படவிருந்த 03 நீண்டகால டெண்டர்களை இரத்து செய்து, அதை விட அதிக விலையில் உடனடி டெண்டர் (Spot Tenders) முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அரசுக்கு இந்த பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.




இந்த நிதி முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக தம்மிக்க ரணதுங்க நேற்று முன்தினம் காலை லஞ்ச ஆணைக்குழு முன் ஆஜரானார். அங்கு பெறப்பட்ட வாக்குமூலங்களுக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சலிய பீரிஸ் நீதிமன்றத்தில் வாதிடுகையில், தனது கட்சிக்காரர் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதால், பிணைச் சட்டத்தின் கீழ் அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேகநபரை தலா 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்குமாறும், வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறும் கடுமையான நிபந்தனைகளை விதித்தார்.




இச்சம்பவம் தொடர்பாக லஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, அப்போதைய துறைசார் அமைச்சரான அர்ஜுன ரணதுங்க இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார் என்றும், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டது.

மேலும், இந்த ஊழல் சம்பவம் தொடர்பாக தம்மிக்க ரணதுங்க முதல் சந்தேகநபராகவும், அர்ஜுன ரணதுங்க இரண்டாவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post