அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (21) நாடு முழுவதும் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மாலிகாவத்தையில் அமைந்துள்ள தேசிய சிறுநீரகம், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த சுகாதார அமைச்சு தவறியமையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சுக்கு ஏற்கனவே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.