கொழும்பு 'பாலதக்ஷ மாவத்தை' மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (19) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு நகரை அண்டியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக திட்டமிடப்பட்ட மேம்பாலத் திட்டத்தின் மூன்றாவது மேம்பாலமாக 'பாலதக்ஷ மாவத்தை' மேம்பாலம் கட்டப்பட்டது.
காலி முகத்திடலில் இருந்து கொம்பனித்தெரு சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை நோக்கி மட்டும் பயணிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இதன் நீளம் 340 மீட்டர்கள். அகலம் 11 மீட்டர்கள். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட நிலையான வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணங்க, இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "கொழும்பு நகரில் மிகவும் பரபரப்பான வணிக இடங்கள், ஜனாதிபதி செயலகம், ஏராளமான ஹோட்டல்கள் இந்த பகுதியில் அமைந்துள்ளதால், இந்த இடம் குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக இருந்தது. அந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக மூன்று மேம்பாலங்களை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. அவற்றில் இரண்டு மேம்பாலங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மேம்பாலம் 2022 ஆம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நீண்ட காலம் தாமதமாகின. பொலிஸ் மா அதிபருடன் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாக, பொலிஸ் உத்தியோகத்தர் குடியிருப்புகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் காணப்பட்டு கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த முடிந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2,700 மில்லியன் ரூபாயில் கட்டப்படவிருந்த மேம்பாலத்திற்கு, கட்டுமான தாமதம் காரணமாக மேலதிகமாக ஒரு பில்லியன் ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது. இந்த மேம்பாலத்தின் கட்டுமானத்தை முடிப்பது மக்களுக்கு பெரும் வசதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இதன் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸ் திணைக்களத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’