இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தனது விமான சேவைகளை விரிவுபடுத்தும் வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன்று (டிசம்பர் 06) முதல் வாரத்திற்கு மூன்று நாட்கள் பகல் நேரத்தில் மேலதிக விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் வசந்த குடாலியனகே இதனைத் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பித்து 52 வருடங்களை நிறைவு செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தனது நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய விமான சேவைகளைச் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விமான சேவைகளின் கீழ், ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு பாரிய Airbus A350-900 ரக பயணிகள் விமானம் காலை 10.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேரும்.
இதுவரை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தினமும் இரவு 11.30 மணிக்கு சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்காவிற்கு அதிநவீன Boeing 787-10 Dreamliner விமானத்தை இயக்கி வந்தது.
பகல் நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த முதல் விமானமாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ-463 விமானம் இன்று காலை 10.45 மணிக்கு 210 பயணிகள், 14 பணியாளர்கள் மற்றும் 12 மெட்ரிக் டன் விமான சரக்குகளுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது.
அதன் பின்னர், அதே விமானம் 276 பயணிகள், 14 பணியாளர்கள் மற்றும் 14 மெட்ரிக் டன் விமான சரக்குகளுடன் பிற்பகல் 12.45 மணிக்கு கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.
இந்த ஆண்டு மே மாதம் முதல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாரத்தின் ஏழு நாட்களும் தினமும் இரண்டு விமானங்களை – பகல் மற்றும் இரவு நேரங்களில் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்க திட்டமிட்டுள்ளதாக குடாலியனகே மேலும் தெரிவித்தார்.