சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேலும் முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு புதிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்த புதிய குழுவில், பிரபல மாடல் மற்றும் முன்னாள் அழகி ராணியுமான ஸ்டெஃபனி சிறிவர்தன அம்மையார் சேர்க்கப்பட்டிருப்பது சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சிறைச்சாலைகள் போன்ற சிக்கலான அரச அமைப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக கலைத் துறையைச் சேர்ந்த ஒரு மாடலை நியமித்தது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.எவ்வாறாயினும், இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க, இது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வழக்கமான நடைமுறைக்கு இணங்கவே இடம்பெற்றது என்று சுட்டிக்காட்டினார். சிறைச்சாலை அமைப்பில் பிரதான மற்றும் துணை கண்காணிப்புக் குழுக்கள் என இரண்டு குழுக்கள் செயல்படுகின்றன. ஸ்டெஃபனி சிறிவர்தன அம்மையார் உள்ளிட்டோர் பிரதான கண்காணிப்புக் குழுவிற்கே நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இந்தக் குழு ஏழு உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றாலும், தற்போது ஆறு உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள வெற்றிடத்தை எதிர்காலத்தில் நிரப்ப அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த நியமனத்தைப் பெற்ற ஸ்டெஃபனி சிறிவர்தன அம்மையார், 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கை அழகி மற்றும் ஆசிய அழகி பட்டங்களை வென்றவர் என்றாலும், அவர் வெறும் பிரபலத்தின் அடிப்படையில் இந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவரும் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டவர்களும் நீண்ட காலமாக சிறைச்சாலைகள் திணைக்களத்துடன் ஒத்துழைத்து பணியாற்றியவர்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். கைதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை அவதானித்து, அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பதுடன், கைதிகளின் நலனுக்காக நேரடியாக தலையிடுவதும் இந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாகும்.
இதற்கிடையில், ஸ்டெஃபனி சிறிவர்தன அம்மையாரின் நியமனம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அவரது மாமாவும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான சம்பிக்க சிறிவர்தன, சமூக ஊடகப் பதிவு ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டியபடி, ஸ்டெஃபனி சிறிவர்தன அம்மையார் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச்சாலை கைதிகளின் நலனுக்காக தன்னார்வத் தொண்டராக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். குறிப்பாக, சிறையில் உள்ள பெண்களின் மனநிலையை மேம்படுத்துதல், அவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் மற்றும் தொழில் பயிற்சி உபகரணங்களை வழங்குதல், அத்துடன் அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட பெண்களை விடுவிக்க தனது சொந்தப் பணத்தைச் செலவிடுதல் போன்ற பல சமூக சேவைகளை அவர் செய்துள்ளதாக அந்தப் பதிவு குறிப்பிடுகிறது.