அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள 41வது உலக திருமணமான அழகி (Mrs. World) போட்டிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபீனா யூசுப் அம்மையார் இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
உலகம் முழுவதிலுமிருந்து 60க்கும் மேற்பட்ட நாடுகளின் போட்டியாளர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த சர்வதேசப் போட்டி, நாளை (22) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மிகவும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போட்டியில் பங்கேற்பதற்காக அவர் இன்று அதிகாலை 03.00 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-659 விமானத்தில் கத்தார் நாட்டின் தோஹாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் என்றும், அங்கிருந்து வேறு விமானம் மூலம் லாஸ் வேகாஸுக்குப் பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, போட்டியின் தேசிய இயக்குநர் சந்திமால் ஜயசிங்க, தேசியப் பயிற்சியாளர் ருக்மால் சேனாநாயக்க, மொழி மற்றும் ஆளுமைப் பயிற்சியாளர் தாரக குருக்கந்த மற்றும் 2024 உலக திருமணமான அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இஷாதி அமந்தா உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இது தவிர, சபீனா யூசுப் அம்மையாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் அவரை உற்சாகப்படுத்தி வழியனுப்புவதற்காக விமான நிலைய வளாகத்தில் கூடியிருந்ததையும் காண முடிந்தது.

