அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) அதிகாரி ஒருவர் காரில் இருந்த ஒரு பெண்ணைச் சுட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. உயிரிழந்த பெண், மூன்று குழந்தைகளின் தாயான 37 வயதுடைய ரெனி குட் (Renee Good) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளின்படி, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனையிட ஒரு அதிகாரி அணுகி, ஓட்டுநரிடம் கதவைத் திறக்குமாறு கூறியுள்ளார். அப்போது கார் முன்னோக்கி நகர்ந்துள்ளது. உடனே, அதற்கு முன்னால் இருந்த மற்றொரு அதிகாரி உடனடியாக தனது துப்பாக்கியை எடுத்து, மிக அருகில் இருந்து ஓட்டுநர் இருக்கையில் இருந்த பெண்ணைச் சுட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சம்பந்தப்பட்ட அதிகாரியின் நடவடிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு காட்சிகள் மிகவும் பயங்கரமானவை என்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இருப்பினும், அந்தப் பெண் வேண்டுமென்றே அதிகாரியை இலக்கு வைத்ததாகவும், அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் கூறி, அதிகாரி நிரபராதி என்று வாதிட்டார். மேலும், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem), அந்தப் பெண் அதிகாரிகளை வாகனத்தால் ஏற்ற முயன்றதால், இதை அதிகாரிகளுக்கு எதிரான ஒரு "உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல்" என்று தான் கருதுவதாகக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மத்திய அரசின் இந்தக் கூற்றுக்களை மினியாபொலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey) கடுமையாக நிராகரித்துள்ளார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் மேயர் குற்றம் சாட்டுகையில், குடியேற்ற அதிகாரிகள் நகரத்தில் குழப்பத்தை விதைப்பதாகவும், பாதுகாப்பின் பெயரில் குடும்பங்களை உடைத்து மக்களைக் கொல்வதாகவும் கூறினார். ICE பிரிவு உடனடியாக தனது நகரத்தையும் மாநிலத்தையும் விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தான் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் சமூகத்துடன் உறுதியாக நிற்பதாக அறிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணின் கார், அருகில் இருந்த மேலும் இரண்டு வாகனங்களில் மோதி நின்றுள்ளது. மருத்துவக் குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சோகத்திற்குப் பிறகு, கோபமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் மினியாபொலிஸ் வீதிகளில் திரண்டு ICE அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கினர். இரவில் மெழுகுவர்த்திகளை ஏற்றி உயிரிழந்த பெண்ணுக்கு அஞ்சலி செலுத்தினர்.