உலகின் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடத்தில் உள்ள இலங்கை டேபிள் டென்னிஸ் வீரர் தாவி சமரவீர, பஹ்ரைன் மற்றும் கட்டாரில் நடைபெற்ற இரண்டு சர்வதேச தரவரிசைப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவர் முதலில், பஹ்ரைனில் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக இளையோர் டேபிள் டென்னிஸ் தரவரிசைப் போட்டியில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர், 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை கட்டார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற உலக இளையோர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்து மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை தாவி சமரவீர வென்றார்.
தற்போது 10 வயதாகும் தாவி சமரவீர, கொழும்பு கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் திறமையான மாணவர் ஆவார். அவரது தந்தை ஹசித சமரவீர அவரது பயிற்சியாளராக செயல்படுகிறார்.
இந்த சிறந்த வெற்றிகளுடன் தாவி சமரவீர மற்றும் அவரது தந்தையும் பயிற்சியாளருமான ஹசித சமரவீர, 26 ஆம் திகதி அதிகாலை 03.55 மணிக்கு ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து சலாம் ஏர் (SalamAir) விமான சேவைக்கு சொந்தமான OV-437 விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அங்கு விமான நிலைய அதிகாரிகள் அவர்களுக்கு அன்பான மற்றும் சிறந்த வரவேற்பை அளித்தனர். தாவி சமரவீரவின் தாய், சகோதரன், இலங்கை டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தயா சமரவீர உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.