முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (19) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெற்றார். கொரியாவுடனான E8 விசா ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையின் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) உரிய நடைமுறையின்றி தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பெறுவதற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த விண்ணப்பத்தை வாபஸ் பெற அனுமதி கோரினார்.
நீதிபதிகள் எஸ். துரைராஜா, ஏ. எச். எம். டி. நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் விண்ணப்பத்தை வாபஸ் பெற அனுமதி வழங்கியது. அதன்படி, சம்பந்தப்பட்ட விடயம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, இந்த விண்ணப்பத்தை தொடர்ந்து நடத்துவதற்கு எதிராக வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்தார்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த மனுஷ நாணயக்கார தனது மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சலிய பீரிஸ், சட்டத்தரணி தனுஷ்க ராகுபத்த மற்றும் சட்டத்தரணி ஜகதீஷ ரணசிங்க ஆகியோர் சட்டத்தரணி பிரவீன் பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில் ஆஜராகினர். பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி லக்மாலி கருணாநாயக்க ஆஜரானார்.