ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் மகேஷி விஜேரத்னவின் மகள் ஹேமாலி விஜேரத்ன, இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளை திட்டி அச்சுறுத்தி கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளிலிருந்து தான் நிரபராதி என்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (06) தெரிவித்தார்.
அரசாங்க கொள்முதல் செயல்முறையிலிருந்து விலகி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற உள்நோயாளிகளுக்கு நரம்பியல் சத்திரசிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்று ஊழல் செய்ததாகக் கூறப்படும் விசேட வைத்தியர் மகேஷி விஜேரத்ன நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு திகதியில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் பிரதிவாதி ஹேமாலி விஜேரத்ன இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்தி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக இலஞ்ச ஆணைக்குழுவால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தான் நிரபராதி என்று தெரிவித்ததையடுத்து, பிரதான நீதவான் வழக்கை விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, சாட்சிகள் மே மாதம் 05 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பாணைகளை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமா, தனது கட்சிக்காரர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்த சட்டத்தரணி, பிரித்தானியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகவும் பிரதிவாதி சம்மதம் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான், பிரதிவாதி ஹேமாலி விஜேரத்னவுக்கு கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினார். அத்துடன், முறைப்பாட்டின் சாட்சிகளுக்கு வழங்கப்பட்ட அறிவிப்பாணைகளின்படி, முறைப்பாடு விசாரணை மே மாதம் 05 ஆம் திகதி தொடங்கும் என்றும் நீதவான் மீண்டும் உத்தரவிட்டார்.